இயற்கை உரத்திற்காக கிடை அமைக்க கொண்டுவரப்பட்ட மாடுகள்
குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாய நிலங்களில் இயற்கை உரத்திற்காக கிடை அமைக்க மாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
குத்தாலம்,ஏப்.19-
குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாய நிலங்களில் இயற்கை உரத்திற்காக கிடை அமைக்க மாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மாட்டு கிடை
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளின் விளை நிலங்களில் இயற்கை உரத்திற்காக கிடை அமைக்க மாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மண் வளத்தை மேம்படுத்தவும், இயற்கை உரத்துக்காகவும் வயல்களில் மாட்டுகிடை அமைக்கும் பழக்கம் பண்டைய காலத்தில் இருந்து நடந்து வருகிறது.
ரசாயன உரங்கள் மண்ணுக்கு கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்த விவசாயிகள் மீண்டும் பழையபடி இயற்கை உரத்துக்கு மாறி வருகிறார்கள். இயற்கை உரத்துக்காக வயல்களில் ஆடு, மாடுகளை கொண்டு கிடை போடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
உம்பளாச்சேரி மாடுகள்
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் பகுதியில் விவசாயி ஒருவரின் நிலத்தில் அரியலூர் மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட மாடுகளின் கிடை அமைக்கப்பட்டுள்ளது. உம்பளாச்சேரி வகையை சேர்ந்த இந்த மாடுகள், ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயங்களுக்காக தேர்ந்தெடுத்து வளர்க்கப்பட்டு அதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பகல் முழுவதும் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இரவில் வயலில் கிடை போடுவார்கள்.
மண்ணின் தரம் மேம்படும்
கிடை விவரம், மாடுகளின் பண்புகள் குறித்து கிடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில்;- சம்பா சாகுபடி, பயிர், உளுந்து அறுவடை முடிவடைந்த நிலையில் தரிசு விளைநிலங்களில் மேய்ச்சலுக்காக மாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகள் விளைநிலங்களில் கிடை போடப்படுவதால் ரசாயன உரங்களால் பாதிக்கப்பட்டுள்ள மண்ணின் தரம் மேம்படும்.
கிடைகளில் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளதால் இவற்றின் சாணம், சிறுநீர் மூலம் பெறப்படும் இயற்கை உரங்களினால் நிலத்தின் மகசூல் பெருகும் மற்றும் உரங்களின் செலவினங்கள் குறையும். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தை போல மழைக்காலங்களில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருச்சி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் சகதி இல்லாத வனப்பகுதிகளிலும் மாடுகள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
ரூ.2 ஆயிரம்
கிடைகள் அமைக்க ஒரு வயலில் குறைந்தது ரூ.2000 வரை கொடுக்கின்றனர். 500 மாடுகள் கிடைகளில் இருந்தாலும் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதில்லை. இந்த வகை மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் உயர்ந்த தரம் கொண்டதாகவும் உள்ளது.
காலை 9 மணிக்கு மேய்ச்சல் தொடங்கி மாலை 5 மணி அளவில் சூரிய அஸ்தமத்தில் மாடுகள் கிடைகளில் அடைக்கப்படுகின்றன. இந்த கிடைகளில் கருவுறுதலுக்காக 1 முதல் 2 மாதங்கள் தனியார் மாடுகளும் கொண்டுவரப்படுகிறது என்றார்.