மின்சாரம் தாக்கி பசு மாடு சாவு
தக்கோலம் அருகேமின்சாரம் தாக்கி பசு மாடு பலியானது.
தக்கோலத்தை அடுத்த புதுகேசாவரம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது பசு மாடு நேற்று பகல் 11 மணியளவில் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பலத்த காற்று வீசியது. இதில் விவசாய நிலத்திற்கு செல்லும் மின் ஒயர் அறுந்து மாட்டின் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி பசு மாடு பரிதாபமாக உயிரிழந்தது.
இதனை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து அறுந்து கிடந்த மின் ஒயரை சரி செய்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர், இறந்த பசுமாட்டை பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.