மாட்டை குளிப்பாட்டி கொண்டிருந்தவரை இழுத்து சென்றது: பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து விவசாயி பலி சிதம்பரம் அருகே சோகம்

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து விவசாயி உயிரிழந்தார்.

Update: 2023-09-16 18:45 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் அருகே உள்ள காட்டுக்கூடலூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சுந்தரமூர்த்தி, நேற்று மதியம் 1 மணியளவில் காட்டுக்கூடலூர் சுடுகாடு அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் தனது மாட்டை குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது ஆற்றில் வந்த முதலை ஒன்று, திடீரென சுந்தரமூர்த்தியின் காலை பிடித்து ஆற்றுக்குள் இழுத்து சென்றது. இதை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுபற்றி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார், சிதம்பரம் மற்றும் குமராட்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து படகுகளில் சென்று மீன்பிடிக்கும் வலை மூலமும், ஆற்றில் இறங்கியும் சுந்தரமூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

உடல் மீட்பு

3 மணி நேர தேடுதலுக்கு பின்னர், மீன் வலையில் அவரது உடல் சிக்கியது. பின்னர் அவரது உடல் கரைக்கு கொண்டு வரப்பட்டது. இதைபார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதைத்தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சுந்தரமூர்த்தியின் இடது காலை முதலை கடித்து ஆற்றுக்குள் இழுத்து சென்றதும், அதில் அவர் இறந்திருப்பதும் தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய கொள்ளிடம் ஆற்றில் உள்ள முதலையை பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்