மின்சாரம் தாக்கி பசுமாடு, நாய் சுருண்டு விழுந்து சாவு
மின்சாரம் தாக்கி பசுமாடு, நாய் சுருண்டு விழுந்து இறந்தன.
வாணியம்பாடி நாடார் காலனி பகுதியில் பழனி என்பவர் தனக்கு சொந்தமான பசுமாடுகளை மேயச்சலுக்காக விட்டிருந்தார். மாடுகள் மேய்ந்த பகுதியில் இருந்த மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது.
அந்த வழியாக மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு அதனை மிதித்ததில் அதில் கசிந்த மின்சாரம் உடலில் பாய்ந்ததால் பசு மாடு சுருண்டு விழுந்து இறந்தது.
அதே பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்றும் அறுந்து விழுந்த மின்சார கம்பியை மிதித்தில் மின்சாரம் தாக்கி இறந்தது.
இப் பகுதியில் மின்கம்பத்திலிருந்து மின்கம்பிகள் தாழ்வாக செல்வதாகவும் அதனை உடனடியாக மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் வாணியம்பாடி மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் இந்தப்பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த 85 வீடுகள் இடிக்கப்பட்டன. அப்போது மின் கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்த நிலையில் இருந்தது. அதனை மின்வாரிய அதிகாரிகள் சரி செய்யவில்லை. இந்த நிலையில் தான் அடுத்தடுத்து பசுமாடு, நாய் மின்சாரம் தாக்கி பலியானது.
இது குறித்து பசுமாட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.