மேலக்கால் ஊராட்சி நிதி முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் -மதுரை கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மேலக்கால் ஊராட்சி நிதி முறைகேடு குறித்து விசாரிக்க மதுரை கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் மேலக்கல் ஊராட்சியை சேர்ந்த கதிரவன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மேலக்கால் ஊராட்சியின் 7-வது வார்டு உறுப்பினராக உள்ளேன். இந்த ஊராட்சியின் தலைவரும், துணைத் தலைவரும் ஊராட்சியில் பல்வேறு பணிகளை முடித்ததாக கூறி, போலி ரசீதுகள் தயாரித்து ஊராட்சி பொது நிதியை முறைகேடு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றியது தொடர்பாக தீர்மானம் தயாரித்து அதில் வார்டு உறுப்பினர்களை கையெழுத்து போடும்படி கேட்டனர். ஆனால் அந்த தீர்மானம் உண்மையானதாக இல்லை என்பதால் நாங்கள் யாரும் கையெழுத்திட மறுத்து விட்டோம். இதுவரை சுமார் ரூ.15 லட்சம் வரை ஊராட்சி நிதியை மோசடி செய்து உள்ளனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை. எங்களது புகார் மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் சதீஷ்பாபு ஆஜராகி, ஊராட்சிக்கு சொந்தமான பொது நிதியை முறைகேடு செய்து, கிராம வளர்ச்சியை தடுத்து வருகின்றனர். இது சம்பந்தமாக அதிகாரிகள் விசாரித்தால்தான் தீர்வு கிடைக்கும் என வாதாடினார்.
முடிவில், மனுதாரரின் புகார் தொடர்பாக வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரிக்க வேண்டும். விசாரணை அறிக்கையை 4 வாரத்தில் தணிக்கைத்துறை உதவி இயக்குனரிடம் வழங்க வேண்டும். இந்த விசாரணை அறிக்கை மற்றும் சட்டத்தின்படியும், தகுதியின் அடிப்படையிலும் மாவட்ட கலெக்டர் உரிய முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.