ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோர்ட்டு உத்தரவு
ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே பாப்பான்படித்துறை பகுதியில் கடந்த 10.6.2013 அன்று தேவராஜ் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது கோபால் என்பவர் ஓட்டிவந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து வந்த கனகாம்பாள் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அப்போதைய ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பான வழக்கு தற்போது திருச்சி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நேற்று ஆஜர் ஆகும்படி விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை கொண்டு சென்ற காவலரிடம், அவர் சம்மனை வாங்க மறுத்துள்ளார். அத்துடன் நேற்று வழக்கு விசாரணைக்கும் ஆஜராகவில்லை. இதனால், அவர் நேரில் ஆஜராகி சம்மனை வாங்க மறுத்ததற்கு விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தற்போது அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.