1,254 வழக்குகள் ரூ.22 கோடியே 11 லட்சத்தில் சமரச தீர்வு
திருப்பூர் மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,254 வழக்குகளுக்கு ரூ.22 கோடியே 11 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது. விபத்தில் 2 கால் இழந்தவருக்கு ரூ.38 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,254 வழக்குகளுக்கு ரூ.22 கோடியே 11 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது. விபத்தில் 2 கால் இழந்தவருக்கு ரூ.38 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.
ரூ.38 லட்சம் இழப்பீடு பெற உத்தரவு
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருப்பூர் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஸ்வர்ணம் நடராஜன் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்ட கோர்ட்டுகளில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலு தலைமையில் 7 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் விபத்து இழப்பீடு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 51). இவர் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
ரூ.38 லட்சம் இழப்பீடு
கடந்த 7-2-2020 அன்று சூலூரில் ரோட்டோரம் நடந்து சென்றபோது லாரி மோதியதில் அவருக்கு 2 கால்களும் துண்டானது. இதற்கு இழப்பீடு கேட்டு திருப்பூர் விபத்து வழக்கு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தார். தனக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க மனு செய்தார். இந்த வழக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ரூ.38 லட்சம் வழங்க நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்தினர் ஒப்புக்கொண்டதால் சமசர தீர்வு காணப்பட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் வக்கீல் லாரன்ஸ் ஆஜராகி வாதாடினார். ரூ.38 லட்சம் பெறுவதற்கான உத்தரவை பால்ராஜிடம் நீதிபதிகள் ஒப்படைத்தனர்.
1,254 வழக்குகளுக்கு தீர்வு
இதுபோல் அவினாசி, காங்கயம், தாராபுரம், பல்லடம் கோர்ட்டுகளில் தலா 2 அமர்வுகளும், உடுமலையில் 4 அமர்வுகளாகவும் என மொத்தம் 19 அமர்வுகளாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மொத்தம் 2 ஆயிரத்து 552 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் 1,254 வழக்குகளுக்கு ரூ.22 கோடியே 11 லட்சத்து 86 ஆயிரத்து 710 மதிப்பில் சமசர தீர்வு காணப்பட்டது.
இதில் 253 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 129 சிவில் வழக்குகள், 17 காசோலை மோசடி வழக்குகள், 11 குடும்ப நல வழக்குகள், 821 சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், 23 வங்கி வராக்கடன் வழக்குகள் உள்ளிட்டவை அடங்கும். இந்த நிகழ்ச்சியில் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, முதன்மை சார்பு நீதிபதி செல்லதுரை, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, நீதித்துறை நடுவர்கள் கார்த்திகேயன், பழனிக்குமார், முருகேசன் மற்றும் வக்கீல்கள் பழனிசாமி, ரகுபதி, கலாநிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.