வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்டு

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு கோபி கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

Update: 2023-03-14 20:33 GMT

கடத்தூர்

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு கோபி கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

விசாரணை அதிகாரி

கோபி அருகே உள்ள தொட்டாபாளையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சரக்கு ஆட்டோ மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற கீழ்வாணியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 19) என்ற வாலிபர் உயிரிழந்தார்.

இதேபோல் கடந்த 2016-ம் ஆண்டு ஓலப்பாளையம் பிரிவில் ஏசுராஜ் என்பவர் செல்வி மேரி என்பவருடன் மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது தனியார் நிறுவன வேன் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார்கள்.

கோபி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சதீஸ் என்பவர் மகேந்தி்சிங் என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை செய்து கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 3 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தார். அப்போது கடையில் இருந்த உதாராம் என்பவர் சதீசிடம் தகராறு செய்து பணி செய்யவிடாமல் தடுத்தார்.

இந்த 3 வழக்குகளிலும் அப்போதைய கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் விசாரணை அதிகாரியாக இருந்தார். அவர் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

போத்தனூர் போலீஸ் இன்ஸ்ெபக்டர்

கோபி அருகே உள்ள கெட்டிசெவியூரில் கடந்த 2019-ம் ஆண்டு சரக்கு வேன் மோதியதில் சோமசுந்தரம் என்ற விவசாயி இறந்தார். அப்போது இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் இருந்தார். தற்போது அவர் ஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு பங்களாப்புதூர் அருகே உள்ள பனங்காட்டு பள்ளம் என்ற இடத்தில் வேன் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற பழனிச்சாமி என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக அப்போதைய பங்களாப்புதூர் இன்ஸ்பெக்டராக கதிர்வேல் இருந்தார். தற்போது கதிர்வேல் கோவை மாவட்டம் போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

பிடிவாரண்டு

மேற்கண்ட 5 வழக்குகளிலும் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாத கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம், போத்தனூர் ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், ஈரோடு் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோருக்கு கோபி முதலாம் வகுப்பு மாஜிஸ்திரேட் விஜய் அழகிரி பிடிவாரண்டு பிறப்பித்து வருகிற 20-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டார்.

ஒரே நேரத்தில் 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு கோபி கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்