மின்சாரம் தாக்கி இறந்த காவலாளி குடும்பத்துக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு
இயற்கை மீது குற்றம் சுமத்தி மின்வாரியம் தப்பிக்க முடியாது. மின்சாரம் தாக்கி இறந்த காவலாளி குடும்பத்துக்கு ரூ. 11 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
இயற்கை மீது குற்றம் சுமத்தி மின்வாரியம் தப்பிக்க முடியாது. மின்சாரம் தாக்கி இறந்த காவலாளி குடும்பத்துக்கு ரூ. 11 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
காவலாளி
மதுரையை சேர்ந்த சூரியகாந்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது கணவர் சதுரகிரி. தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்தார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு எங்கள் வீட்டின் அருகில் உள்ள தென்னந்தோப்பில் எனது கணவர் குளிக்க சென்றார். அப்போது அங்கிருந்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில் என் கணவர் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குபதிவு செய்தனர். நான் பட்டியல் இனத்தை சேர்ந்தவள். என் கணவரின் வருமானத்தை நம்பித்தான் நானும், எனது 2 குழந்தைகளும் இருந்தோம். தற்போது மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். என் கணவர் இறப்புக்கு இழப்பீடு கேட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை.
மின்வாரியத்தின் பராமரிப்பு குறைபாடு காரணமாகத்தான் மின்கம்பி அறுந்துவிழுந்து, என் கணவர் இறந்துள்ளார். எனவே எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இயற்கை சீற்றம்
இந்த வழக்கு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மின்வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல், இயற்கை சீற்றத்தால் தென்னை மரக்கிளை விழுந்ததால் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மனுதாரர் கணவர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். இதற்கு மின்வாரியம் பொறுப்பாகாது என தெரிவித்தார்.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
பருவநிலை மாற்றம், மழைக்காலங்களில் மின்கம்பி செல்லும் பாதைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். மரக்கிளைகள் மின்கம்பிகளில் ஊடுருவாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும். இது போன்ற விபத்துகளுக்கு மின்வாரியம் பொறுப்பேற்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு தீர்ப்புகளில் கூறியுள்ளது.
இழப்பீடு
மேலும் மின் கம்பியில் தென்னை மரக்கிளை விழுந்து, மனுதாரர் கணவர் இறந்ததற்கு இயற்கை மீது குற்றம்சுமத்தி தப்பிக்க முடியாது. மனுதாரரின் கணவர் இறந்ததற்கு மின்வாரியமே முழு பொறுப்பேற்க வேண்டும். எனவே மனுதாரருக்கு ரூ.10 லட்சத்து 85 ஆயிரத்தை 6 சதவீத வட்டியுடன் இழப்பீடாக 12 வாரத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.