கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் மாடுகளை பராமரிக்க தீர்வு என்ன?

கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் மாடுகளை பராமரிக்க தீர்வு என்ன? என்று கேட்டு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-08-26 20:56 GMT


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சுற்றிலும் தனியார் மற்றும் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான பல்வேறு கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், நேர்த்திக்கடனாக பசு மற்றும் காளை மாடுகளை தானமாக வழங்குகின்றனர்.

இந்த மாடுகளை கோவில் நிர்வாகம்தான் பராமரிக்க வேண்டும். ஆனால் நேர்த்திக்கடனாக விடப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிப்பு இன்றி, திருப்புவனம் பகுதி சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த சில வருடங்களாக இந்த மாடுகளால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். கோவில் மாடுகளை முறையாக பாதுகாக்கும்படி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்படும் மாடுகள் சாலையில் சுற்றித்திரியாமல் முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவில்களில் நேர்த்திக்கடனாக பெறப்படும் மாடுகளை பராமரிக்கும் விவகாரத்திற்கான தீர்வு என்ன என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்