விரைவான தரிசனத்துக்கு பக்தர்களிடம் முறைகேடாக பணம் வசூலிப்பா?

விரைவான தரிசனத்துக்கு பக்தர்களிடம் முறைகேடாக பணம் வசூலிப்பா? வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-08-24 18:48 GMT


மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக அங்கு பக்தர்களுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். அப்போது கோவில் ஊழியர்கள் சில பக்தர்களை அணுகி, விரைவாக சாமி தரிசனம் செய்ய முறைகேடாக பணம் வசூலித்தனர். அவர்களை வரிசையில் நிற்க வைக்காமல், நேராக கருவறையின் அருகில் தரிசனம் செய்யும் வகையில் அனுப்பி வைத்தனர்.

என்னிடமும் 500 ரூபாய் கொடுத்தால் விரைவான தரிசனம் செய்யலாம் என கட்டாயப்படுத்தினர். இதுபோல ஏராளமான பக்தர்களிடம் ஆயிரக்கணக்கான ரூபாயை சட்டவிரோதமாக வசூலித்தனர். இது, என்னைப்போன்ற பக்தர்கள் இடையே பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீசாரிடமும், கோவில் இணை கமிஷனரிடமும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி கோவில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் விளம்பர நோக்கத்தில் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்து வருகிறார் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி, மனுதாரர் எந்தவிதமான ஆதாரமும் இன்றி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இதை ஏற்க இயலாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்