மதுரை கமிஷனர்-2 சூப்பிரண்டுகள் 27-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும்
கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக கருத்து தெரிவித்த நீதிபதி, இதுதொடர்பான வழக்குகள் சம்பந்தமாக மதுரை போலீஸ் கமிஷனர், 2 மாவட்ட சூப்பிரண்டுகள் வருகிற 27-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக கருத்து தெரிவித்த நீதிபதி, இதுதொடர்பான வழக்குகள் சம்பந்தமாக மதுரை போலீஸ் கமிஷனர், 2 மாவட்ட சூப்பிரண்டுகள் வருகிற 27-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
முன்ஜாமீன் வழக்கு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில், முகமது அன்சாரி ஆகியோர் மீது அரசு ஊழியரை பணியை செய்யவிடாமல் தடுத்தது, மிரட்டியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வத்தலக்குண்டு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு அவர்கள் இருவரும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர்கள் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை இந்த கோர்ட்டு கடந்த மாதம் 25-ந்தேதி தள்ளுபடி செய்தது. மேலும் மனுதாரர்களை உடனடியாக கைது செய்யும்படியும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் தற்போது அவர்கள் 2-வது முறையாக தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
போலீசார் மெத்தனம்
மனுதாரர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவோ அல்லது விசாரணை அதிகாரியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது. கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை பின்பற்றுவதில் போலீசார் மெத்தனப்போக்கை கடைபிடிக்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது.
அதுமட்டுமல்லாமல் மனுதாரர்களுடன் போலீசார் கூட்டு சேர்ந்துள்ளனர் என்றே இந்த கோர்ட்டு கருதுகிறது. ஆனால் மனுதாரர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுவதாக அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.
இதுசம்பந்தமாக விளக்கம் அளிக்க திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் வருகிற 27-ந்தேதி பிற்பகல் 2.15 மணிக்கு இந்த கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை போலீஸ் கமிஷனர்
இதேபோல மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த மூவேந்திரபாண்டியன், அவரது மனைவி பஞ்சவர்ணம், லட்சுமி ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கிலும் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை போலீசார் பின்பற்றவில்லை என்றும், மனுதாரர்களின் தொந்தரவால் பாதிக்கப்பட்டவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பகுதியில் போலீஸ் நிலையம் செயல்பட்டும் எந்த பிரயோஜனமும் இல்லை.
எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் வருகிற 27-ந்தேதி பிற்பகல் 2.15 மணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பானு என்பவரின் முன்ஜாமீன் வழக்கில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவும் அதே நாள், அதே நேரத்தில் ஆஜராகும்படியும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.