டிராக்டர் மீது கொரியர் லாரி மோதல்; டிரைவர் பலி

கயத்தாறு அருகே டிராக்டர் மீது கொரியர் லாரி மோதிய விபத்தில் டிராக்டர டிரைவர் பலியானார்.

Update: 2023-02-16 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே டிராக்டர் மீது கொரியர் லாரி மோதியதில் டிராக்டர் டிரைவர் பரிதாபமாக பலியானார்.

டிராக்டர் டிரைவர்

கயத்தாறு அருகே நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துக்காளை மகன் வெயிலுமுத்து (வயது 42). இவர் கயத்தாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாட்சுமேன் வேலை செய்து வருகிறார். மேலும், டிராக்டர் டிரைவராகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இவர் நேற்று காலை 7 மணிக்கு கயத்தாறு அருகே உள்ள தனியார் கிரசரில் எம்சாண்டு மணலை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, கயத்தாறு நோக்கி வந்து கொண்டிருந்தார். கரிசல்குளம் விலக்கு அருகில் நாற்கர சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கோவையில் இருந்து நெல்லைக்கு கொரியார் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

கொரியர் லாரி மோதியது

இந்த லாரியை நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் முருகன்(45) ஓட்டி வந்தார்.

திடீரென்று எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது கொரியர் லாரி மோதியது. இதில் டிராக்டர் சாலை ஓரத்தில் தூக்கி வீசப்பட்டது. இதில் டிராக்டர் நொறுங்கி உருக்குலைந்து போனது. இதை ஓட்டிச்சென்ற வெயில்முத்துவும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்தில் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக பலியானார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்த வெயிலுமுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன வெயில்முத்துவுக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்