லாரி சக்கரத்தில் சிக்கி தம்பதி சாவு
மோட்டார் சைக்கிளில் சென்ற போது லாரி மோதியதில் சக்கரத்தில் சிக்கி தம்பதியினர் பரிதாபமாக இறந்தனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற போது லாரி மோதியதில் சக்கரத்தில் சிக்கி தம்பதியினர் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கட்டுமான தொழிலாளர்கள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கரட்டுபாளையத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 50). இவருடைய மனைவி காமாட்சி (45). இவர்கள் கட்டுமான தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை சின்னத்துரையும், காமாட்சியும் பொள்ளாச்சி டீச்சர்ஸ் காலனியில் கட்டுமான வேலை செய்ய வால்பாறை ரோடு சூளேஸ்வரன்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.
பரிதாப சாவு
அப்போது, ரோட்டில் இருந்த வேகத்தடை அருகே மோட்டார் சைக்கிளை சின்னத்துரை மெதுவாக இயக்கியதாக தெரிகிறது. அப்போது பின்னால் வந்த லாரி திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி அவர்கள் 2 பேரும் கீழே விழுந்தனர். இதனால் லாரியின் பின்சக்கரம் அவர்கள் 2 பேர் மீதும் ஏறி இறங்கியது. இதில் சின்னத்துரையும், காமாட்சியும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
லாரி டிரைவர் கைது
இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இதற்கிடையே தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர், கோட்டூரை சேர்ந்த சதீஷ் (39) என்பதும், அர்த்தநாரிபாளையத்தில் இருந்து ஆச்சிப்பட்டிக்கு செங்கல் ஏற்றி சென்றதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சதீசை கைது செய்தனர்.
இந்த விபத்து காரணமாக வால்பாறை ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.