செல்போன் திருடிய தம்பதி கைது
ஜோதிடம் பார்ப்பது போல நடித்து செல்போன் திருடிய தம்பதி கைது செய்யப்பட்டனர்.
நத்தம் அருகே மணக்காட்டூரை சேர்ந்தவர் பூங்கொடி (வயது 35). நேற்று, இவரது வீட்டுக்கு ஒரு ஆணும், பெண்ணும் ஜோதிடம் பார்ப்பதாக கூறி வந்தனர். அவர்கள் பூங்கொடியிடம் தண்ணீர் கேட்டனர். உடனே பூங்கொடி வீட்டுக்குள் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை திருடிக்கொண்டு அவர்கள் தப்ப முயன்றனர். இதைப் பார்த்த பூங்கொடி திருடன், திருடன் என்று கூச்சலிட்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அவர்களை பிடித்து நத்தம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், எரியோடு அருகே கோவிலூரை சேர்ந்த தங்கவேல் (48), நித்யா என்றும், இருவரும் கணவன், மனைவி என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர்.