மூதாட்டிகளை குறி வைத்து நூதன முறையில் நகை பறித்த தம்பதி கைது

குமரி மாவட்டத்தில் மூதாட்டிகளை குறி வைத்து நூதன முறையில் நகை பறித்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். இதேபோல் 2 பேரும் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.

Update: 2022-10-20 22:04 GMT

குழித்துறை:

குமரி மாவட்டத்தில் மூதாட்டிகளை குறி வைத்து நூதன முறையில் நகை பறித்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். இதேபோல் 2 பேரும் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.

நூதன முறையில் நகை பறிப்பு

குமரி மாவட்டத்தில் கடந்த 2019 முதல் 2021-ம்ஆண்டு வரை அரசு ஆஸ்பத்திரி, கோர்ட்டு வளாகங்கள், பஸ் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் மூதாட்டிகளிடம் அன்பாக பேசி ஒரு தம்பதி நகை பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அதாவது முதியோர் ஓய்வூதியம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அவர்களின் கவனத்தை திசை திருப்பி அந்த தம்பதியினர் நூதன முறையில் கைவரிசை காட்டியுள்ளனர். மேலும் கோவில் விழாவின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தியும் அவர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குமரி மாவட்ட போலீசில் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரர் ராஜ், மகேஷ் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

தம்பதி கைது

இதனை தொடர்ந்து தனிப்படையினர் சென்னை, தர்மபுரி, புதுச்சேரி, கூடலூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று அங்குள்ள போலீசாரின் உதவியுடன் தம்பதியை தேடி வந்தனர். ஆனால் அந்த தம்பதியினர் இடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில் மார்த்தாண்டம் பகுதியில் சுற்றித்திரிந்த மதுரை எலைட் நகர் போடி லைனில் உள்ள சித்திரவேல் (வயது 40), அவருடைய மனைவி பார்வதி (48) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்டு குமரியை கலக்கிய தம்பதி என்பதும், மூதாட்டிகளிடம் அரசு நலத்திட்ட உதவி பெற்று தருவதாக நகை மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து 10 பவுன் நகைகளை மீட்டனர்.

பரபரப்பு தகவல்

இதேபோல் கைதான தம்பதி தமிழகம் முழுவதும் பல இடங்களில் கைவரிசை காட்டிய தகவலும் போலீஸ் விசாரணையில் வெளியானது. அதாவது, வீடுகளில் கதவின் பூட்டை உடைத்து திருடினால் போலீசில் மாட்டி விடுவோம். இதனால் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மூதாட்டி மற்றும் குழந்தைகளிடம் நகையை பறிக்கலாம் என முடிவு செய்து தம்பதியினர் கைவரிசை காட்டி வந்துள்ளனர்.

அதாவது தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராக சென்று ஒரே பாணியில் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் விசேஷம் என்னவென்றால், திருவிழா காலங்களில் மக்கள் அதிகமாக கூடும் கோவில், பஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் வயதான பெண்களை சந்தித்து அன்பாக பேசி தொடர்ந்து நகை பறிப்பில் கில்லாடியாக இருந்துள்ளனர்.

அந்த வகையில் 3 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவர்கள் மார்த்தாண்டம் போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டனர்.

இந்த தம்பதியினர் உருவம் முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சிக்கியிருந்தது. அதன்படி நடந்த அடுத்தடுத்த விசாரணையில் தான் இவர்கள் சிக்கி கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்