விவசாயிகளுக்கு நாட்டு மாடு வழங்க வேண்டும்

நீலகிரியில் இயற்கை விவசாயத்திற்கு மாற விவசாயிகளுக்கு நாட்டு மாடு வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2023-01-28 18:45 GMT

ஊட்டி, 

நீலகிரியில் இயற்கை விவசாயத்திற்கு மாற விவசாயிகளுக்கு நாட்டு மாடு வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

சுண்டவயல் விவசாயி ரகுநாதன்:- பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பலருக்கும் சரியான முறையில் வருவதில்லை. பலமுறை விண்ணப்பித்தும் சரியான பதில் வரவில்லை. இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் நீலகிரியில் பள்ளிக்கூடங்களில் பசுமை குடில் கட்டாயமாக அமைத்து பள்ளி குழந்தைகளுக்கு விவசாயம் மீது ஆர்வம் ஏற்படுத்த வேண்டும்.

பசுமை குடில்

வேளாண் அதிகாரி:- கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். இ-கேஒய்சி மூலம் கைரேகை பதிவு செய்ய வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு மேல் பயன் பெற இயலாது. அரசு ஊழியராக பணியாற்றுபவராக இருந்தாலோ அல்லது குடும்பத்தில் ஒருவர் அரசு ஊழியராக இருந்தாலோ பயன்பெற முடியாது. இதேபோல் கூட்டு பட்டாவில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், அது சரி செய்யப்பட்ட பின்னர் தொகை வழங்கப்படும். பசுமை குடில் குறித்து அரசுக்கு கருத்து அனுப்பப்படும்.

வெட்டுவாவி சவுந்தர்ராஜ்:- சொட்டுநீர் பாசனத்திற்கு விண்ணப்பித்தேன். இதுவரை இணைப்பு கிடைக்கவில்லை. வேளாண் உபயோக பொருட்கள், கருவிகள் கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை.வேளாண் அதிகாரி:- நுண்ணீர் பாசன திட்ட வழிகாட்டுதலின்படி ஒரு ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மானியத்தில் தெளிப்பு நீர் பாசன கருவி வழங்க இயலாது.

நாட்டு மாடு

நீலகிரி பிரகாஷ்:-

நீலகிரியில் பல விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற தயாராக உள்ளனர். அவர்களுக்கு நாட்டு மாடு வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் இயங்கும் அட்மா திட்டத்தில் இந்த வருடம் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும்.

வேளாண் அதிகாரி:- தோட்டக்கலைத்துறை சார்பில் நாட்டு மாடுகள் வழங்கும் திட்டம் இல்லை. கால்நடை பராமரிப்பு துறை மூலம் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாடுகள் வழங்கப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து பாடந்துறையில் உள்ள கற்கப்பாடி வரை சிறிய ஓடையை தூர்வார வேண்டும். மேலும் சோலார் மின் வேலி அமைக்க வேண்டும். கோழி உரம், புண்ணாக்கு, மண்புழு உரம் வாங்க மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு சோலார் மின் மோட்டார் அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் அம்ரித் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்