கிணத்துக்கடவில் நாளை வாக்கு எண்ணிக்கை

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் காலியான பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-07-10 16:39 GMT

கிணத்துக்கடவு, 

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் காலியான பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

காலியான பதவிகளுக்கு தேர்தல்

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர், குருநல்லிபாளையம் 4-வது வார்டு, சொக்கனூர் ஊராட்சி 1-வது வார்டு, நல்லட்டிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் ஆகிய இடங்கள் காலியானது. காலியாக உள்ள பதவி இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நல்லட்டிபாளையம், சொக்கனூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் வார்டு உறுப்பினர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனால் நெ.10 முத்தூர் ஊராட்சி தலைவர் மற்றும் குருநல்லிபாளையம் வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணும் மையம்

இந்தநிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. இதற்கிைடயே நேற்று கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் நெ.10 முத்தூர் ஊராட்சி மற்றும் குருநல்லிபாளையம் 4-வது வார்டில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்கும். வாக்கு எண்ணுவதற்கு 2 மேஜைகள் போடப்பட்டு உள்ளது. ஒரு மேஜைக்கு 3 பேர் என 2 மேஜைகளுக்கு 6 பேர் பணிபுரிவார்கள். ஊராட்சி தலைவர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணியில் வேட்பாளர் மற்றும் அவருடன் ஒரு நபர் என 2 பேர் மட்டும் அனுதிக்கப்படுவர்.

போலீஸ் பாதுகாப்பு

அதேபோல் வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணிக்கு ஒருவர் மட்டுமே அனுமதி உள்ளது. வாக்கு எண்ணும் பணியை பார்வையிட வரும் போது, செல்போன், பேனா, நோட்டு கொண்டு வர அனுமதி இல்லை. வாக்கு எண்ணும் போது ஊராட்சி ஒன்றிய வளாகத்துக்குள் பிற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். வாக்கு எண்ணிக்கையையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்