5 பதவிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணிக்கை
குமரியில் 5 பதவிகளுக்கு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 56.62 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்ைக நாளை (செவ்வாய்க்கிழமை) 4 இடங்களில் நடக்கிறது
நாகர்கோவில்:
குமரியில் 5 பதவிகளுக்கு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 56.62 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்ைக நாளை (செவ்வாய்க்கிழமை) 4 இடங்களில் நடக்கிறது.
56.62 சதவீத வாக்குப்பதிவு
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 10-வது வார்டு, குருந்தன்கோடு ஒன்றியம் 7-வது வார்டு, மருதூர்குறிச்சி ஊராட்சி 5-வது வார்டு, கண்ணனூர் ஊராட்சி 4-வது வார்டு, காட்டாத்துறை ஊராட்சி 5-வது வார்டு என மொத்தம் 5 பதவிகளுக்கு தற்செயல் உள்ளாட்சி தேர்தல் நேற்றுமுன்தினம் நடந்தது. தேர்தலில் 56.62 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த கட்சி முகவர்கள் முன்னிலையில் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டன. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அறைகளுக்கு 'சீல்' வைப்பு
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஓன்றியம் 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பதிவான வாக்குப்பெட்டிகள் ராஜாக்கமங்கலம் ஒன்றிய அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அறையில் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. இதேபோல் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் 7-வது வார்டில் பதிவான வாக்குப் பெட்டிகள் குருந்தன்கோடு ஒன்றிய அலுவலகத்திலும், தக்கலை ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதூர்குறிச்சி கிராம ஊராட்சி 5-வது வார்டில் பதிவாக வாக்குப் பெட்டிகள் தக்கலை ஒன்றிய அலுவலகத்திலும் கொண்டு செல்லப்பட்டு பூட்டி 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
திருவட்டார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணனூர் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பதிவான வாக்கு பெட்டிகளும், காட்டாத்துறை கிராம ஊராட்சி 5-வது வார்டில் பதிவான வாக்குப்பெட்டிகளும் திருவட்டார் ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பூட்டி 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கையானது நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் நடைபெறும். இரவு 8 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.