தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
மாவட்டத்தில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குனர் ஆய்வு
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் இயக்க பயிற்சி 14 ஒன்றியங்களில் 48 மையங்களில் நடந்து வருகிறது. கடலூர் வட்டாரத்தில் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பாளையம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் நடந்தது. இந்த பயிற்சியை மாவட்ட பார்வையாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குனருமான மணிகண்டன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, 1,2,3-ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடம் தொடர்பான செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கலா, இணை பேராசிரியர் நடராஜ், முதுநிலை விரிவுரையாளர் பழனி ஆகியோர் உடனிருந்தனர்.