கவுந்தப்பாடியில் உள்ள வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.41¾ லட்சம் மோசடி நகை மதிப்பீட்டாளர் கைது

கவுந்தப்பாடியில் உள்ள வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.41¾ லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-25 22:16 GMT

கவுந்தப்பாடியில் உள்ள வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.41¾ லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.

நகை மதிப்பீட்டாளர்

கோபி காளியண்ண வீதியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 36). இவர் கவுந்தப்பாடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது இவர் தனக்கு தெரிந்த 10 பேரை சந்தித்து உள்ளார். அவர்களிடம் அங்கமுத்து கூறுகையில், 'எனக்கு குடும்ப கஷ்டம் உள்ளது. எனவே எனக்கு பணம் தேவைப்படுகிறது. என்னிடம் நகைகள் உள்ளன. ஆனால் எனது பெயரில் வங்கியில் நகைகளை அடகு வைக்க முடியாது. எனவே எனக்காக உங்கள் கணக்கில் நகைகளை அடகு வைத்து பணத்தை வாங்கி கொடுங்கள். பின்னர் பணத்தை உங்கள் கணக்கில் நான் செலுத்தி நகைகளை மீட்டு கொள்கிறேன்,' என தெரிவித்து உள்ளார். இதை உண்மை என நம்பிய 10 பேரும் தங்களுடைய வங்கி கணக்கில் நகைகளை அடகு வைத்து பணத்தை வாங்கி அங்கமுத்துவிடம் கொடுத்து உள்ளனர்.

தணிக்கை

இந்த நிலையில் வங்கியில் உள்ள நகைகளை தணிக்கை செய்ய உயர் அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வந்து உள்ளனர். அப்போது 10 பேரின் கணக்கில் உள்ள நகைகள் போலி என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 10 பேரையும் அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் அனைவரும் அங்கமுத்து தான் இந்த நகைகளை கொடுத்து வங்கியில் அடகு வைத்து பணம் வாங்கி கொடுக்க கூறினார் என்றனர். ஆனால் அந்த நகைகள் போலி என்பது எங்களுக்கு தெரியாது என 10 பேரும் தெரிவித்தனர்.

ரூ.41¾ லட்சம் மோசடி

அப்போது தான் அதிகாரிகளுக்கு போலி நகைகளை அடகு வைத்ததின் மூலம் அங்கமுத்து ரூ.41 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்து உள்ளார் என தெரியவந்தது.

இதனிடையே வங்கி நகைகளை தணிக்கை செய்ய உயர் அதிகாரிகள் வருகிறார்கள் என்பதை முன்கூட்டியை அறிந்து கொண்ட அங்கமுத்து கடந்த நவம்பர் மாதமே உடல் நலம் சரியில்லை என விடுப்பு எடுத்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால் மீண்டும் வேலைக்கு வரவில்லை.

கைது

பின்னர் இதுகுறித்து வங்கியின் ஈரோடு மண்டல உதவி பொதுமேலாளர் சங்கர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க கவுந்தப்பாடி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

அவருடைய உத்தரவின்பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போலி நகைகளை அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக அங்கமுத்துவை கைது செய்தனர்.

இந்த சம்பவம் கவுந்தப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்