'புதிதாக மது அருந்த வருபவர்களுக்கு கவுன்சிலிங்':குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 இடங்களில் மறுவாழ்வு மையம்ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி

‘புதிதாக மது அருந்தி வருபவர்களுக்கு கவுன்சிலிங்’: குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 இடங்களில் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி தொிவித்தாா்.

Update: 2023-07-17 22:06 GMT

புதிதாக மது அருந்த வருபவர்களுக்கு கவுன்சிலிங் தரப்படுவதுடன், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 இடங்களில் மறுவாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

பணி இடைநீக்கம்

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 218-வது நினைவு நாள் ஈரோடு பெரியார் நகரில் உள்ள அமைச்சர் சு.முத்துசாமி முகாம் அலுவலகத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதித்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, பொல்லான் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் கந்தசாமி, சந்திரகுமார், மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், மாநகர செயலாளர் சுப்பிரமணி, தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் நித்தின், கவுன்சிலர்கள் பழனிசாமி, செல்லபொன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும். சில மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்த ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காலை 7 மணிக்கு மது விற்பனை செய்யப்படும் என்று சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். மதுக்கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்படாது.

கவுன்சிலிங்

புதிதாக வாலிபர்கள் மது வாங்க வந்தால் அது குறித்து தகவலை அளிக்க வேண்டும் என்று மது விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. புதிதாக மது அருந்த வரும் வாலிபர்களுக்கு மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து கவுன்சிலிங் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

21 வயதுக்கு குறைவான வாலிபர்களுக்கு மது விற்க கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். முதல் முறையாக 3 மாவட்டங்களில் வாகனம் மூலம் மதுவால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளோம். சிறிய அளவிலான டெட்ரா பேக் (டின்) அளவில் வந்தால் குழந்தைகள் தவறாக பயன்படுத்துவார்கள் என்ற ஆபத்து உள்ளதால் டெட்ரா பேக் குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுக்கு பிறகே முடிவு செய்யப்படும்.

மறுவாழ்வு மையம்

எந்தெந்த பகுதிகளில் என்னென்ன மதுவகைகளை மதுபிரியர்கள் அதிகம் விரும்பி கேட்கிறார்கள் என்பதை சர்வே எடுக்க சொல்லி இருக்கிறோம்.

15 இடங்களில் மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்