பேரூராட்சி கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தேவர்சோலையில் வரி உயர்வை கண்டித்து பேரூராட்சி கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
தேவர்சோலையில் வரி உயர்வை கண்டித்து பேரூராட்சி கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரூராட்சி மன்ற கூட்டம்
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மன்ற தலைவர் வள்ளி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பிரதீப் குமார், துணைத்தலைவர் யூனைஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினர். அதன் விவரம் வருமாறு:-
13-வது வார்டு கவுன்சிலர் கிரிஜா:-
எனது வார்டில் நடைபெறும் பணிகள் தரம் இருப்பதில்லை. இது தொடர்பாக ஒப்பந்ததாரரிடம் பலமுறை முறையிட்டும் அலட்சியமான பதில் அளிக்கிறார். இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வருகிறது. எனவே ஆய்வு செய்ய வேண்டும். செயல் அலுவலர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
2-வது வார்டு கவுன்சிலர் மாதேவ்:-
எனது வார்டில் எந்த பணிகளும் நடைபெறுவதில்லை. இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் பேரூராட்சி பகுதியில் அனைத்து வரிகளும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
சாலை மறியல்
இதையடுத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்த விவரங்களை கவுன்சிலர்களுக்கு தர வேண்டும் என்றுக்கோரி துணைத்தலைவர் யூனைஷ் பாபு, கவுன்சிலர்கள் மாதேவ், கிரிஜா, ஹனிபா, நாசர், ஜோஸ், ரம்ஷினா, சாய்னா, முகேஷ், சாய் பிரியா உள்பட 12 பேர் மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அலுவலகம் முன்பு அமர்ந்து கோஷம் எழுப்பினர். சில கவுன்சிலர்கள் அலுவலகத்தின் வெளியே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.