கவுன்சிலர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
நெய்யூர் பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளை கண்டித்து கவுன்சிலர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கவுன்சிலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திங்கள்சந்தை,
நெய்யூர் பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளை கண்டித்து கவுன்சிலர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கவுன்சிலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
நெய்யூர் பேரூராட்சியில் அதிகாரிகள் வளர்ச்சி பணிகளை ஒதுக்கீடு செய்யவில்லை என சில கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து அதிகாரிகளை கண்டித்து நேற்று முன்தினம் மாலையில் 8 கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்.
இந்த போராட்டத்தில், 6-வது வார்டு கவுன்சிலர் புஷ்பதிரேஸ், 7-வது வார்டு எழில் டைசன், 10-வது வார்டு ததேயு ராஜா, 13-வது வார்டு விஸ்வாசம், 3-வது வார்டு மேரி லில்லி புஷ்பம், 4-வது வார்டு ராஜாகலா, 12-வது வார்டு கவிதா, 9-வது வார்டு ஷீலா உள்பட 8 ேபர் ஈடுபட்டனர். அவர்களிடம் இரணியல் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால், போராட்டம் இரவு முழுவதும் விடிய, விடிய நீடித்தது.
2-வது நாளாக போராட்டம்
நேற்று 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 9-வது வார்டு கவுன்சிலர் ஷீலாவுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சிகிச்சை முடிந்த பின்பு கவுன்சிலர் ஷீலா மீண்டும் போராட்டத்தில் பங்கேற்றார்.
இந்த உள்ளிருப்பு போராட்டம் குறித்து கவுன்சிலர்கள் கூறியதாவது:-
நெய்யூர் பேரூராட்சியில் ஒரு சில வார்டுகளில் இதுவரை எந்த வளர்ச்சி பணியும் ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே குறிப்பிட்ட அந்த வார்டுகளில் பணி ஒதுக்க வேண்டும். இது குறித்து பேரூராட்சி உதவி இயக்குனர் நேரில் வந்து உறுதியளிக்க வேண்டும்.
பரபரப்பு
அவ்வாறு உறுதியளித்தால் மட்டுமே உள்ளிருப்பு போராட்டத்தை கைவிடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். இதனால் போராட்டம் தொடர்ந்து நடந்தது.
பெண் கவுன்சிலரின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
----------
(2 காலம் படம்)