கவுன்சிலர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-23 18:45 GMT

குளச்சல்:

ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் கவுன்சிலர்கள் பிராங்கிளின், ஷோபா, சுசீலா, சிந்து, ஜெகதீஸ்வரி, ஜெயசேகர், ஜெயக்குமார், மரிய செல்வி, அனிதா, சோமன், ஆஸ்வால்டர் ஆகியோர் சீரான குடிநீர் வினியோகிக்க கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் செயல் அலுவலர் சங்கர்கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இரவு ஆகியும் தீர்வு ஏற்படாததால் இரவு முழுவதும் உள்ளிருப்பில் ஈடுபட்டனர். பெண் கவுன்சிலர்கள் 3 பேர் தங்கள் குழந்தைகளுடன் விடிய விடிய போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் நேற்றும் தீர்வு ஏற்படாததால் உள்ளிருப்பு போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்தது. இவர்களுடன் பேரூராட்சி தலைவர் எட்வின்ஜோஸ், துணைத்தலைவர் விஜூமோன், 14-வது வார்டு கவுன்சிலர் ஷீலா ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்கள் வார்டுகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் தெற்கு பிடாகை பகுதியில் நடைபெற்ற குடிநீர் குழாய் பதிக்கும் பணியை அப்பகுதி பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் கணேஷ் குடிநீர் குழாயை சேதப்படுத்தி, திருடி சென்றதாக குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அப்பகுதியை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்