வார்டுகளில் எந்த நலத்திட்டங்களும் செய்யவில்லை்; பெரம்பலூர் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வேதனை
வார்டுகளில் எந்த நலத்திட்டங்களும் செய்யவில்லை என பெரம்பலூர் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வேதனை தெரிவித்தனர்.
பெரம்பலூர் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதற்கு நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா முன்னிலை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சரக்கு வாகனங்கள் பழுது நீக்க பணம் ஒதுக்கீடு செய்ய தீர்மானம் கொண்டு வந்ததற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய பஸ் நிலையம் அம்மா உணவகம் அருகே ஏ.டி.எம். மையம் அமைக்க இடம் வழங்க பெரும்பாலான கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சிக்கு புதிதாக பொக்லைன் எந்திரம் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். கவுன்சிலர்களில் சிலர் தங்களது வார்டுகளில் எந்த நலத்திட்டங்களும் செய்யவில்லை. ஏன் கவுன்சிலர் ஆனோம் என்று வேதனையாக உள்ளது. இதனால் வார்டு மக்களை சந்திக்க பயமாக உள்ளது. மேலும் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்களுக்கு அவசர தேவைக்கு போன் செய்தால் கூட, அவர்கள் எடுப்பதில்லை, என்று குற்றம் சாட்டினர். மேலும் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்கு புதிதாக காவிரி குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, சாலை அமைத்தல், தெரு விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யவும், குப்பைகளை அள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் 2019-20 நிதி ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் நுழைவு வாயில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 15 அடி உயரத்திற்கு நான்கு பில்லர்கள் எழுப்பப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள், பயணிகள் சிரமத்துடன் வந்து செல்கின்றனர். எனவே அந்த நான்கு பில்லர்களை இடித்து அப்புறப்படுத்தப்படவுள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளின் தீர்மானங்களுக்கு நகர்மன்ற கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது.