பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் தர்ணா
கோத்தகிரியில், வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கக்கோரி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி
கோத்தகிரியில், வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கக்கோரி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி கூட்டம்
கோத்தகிரி பேரூராட்சி கூட்டம், நேற்று காலை மன்ற அரங்கில், தலைவர் ஜெயகுமாரி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் உமாநாத், செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர் ராஜேஸ்வரி வடிவேல், தி.மு.க. கவுன்சிலர் வெஸ்லி மற்றும் சுயேச்சை கவுன்சிலர் கற்பகம் ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
ராஜேஸ்வரி வடிவேல்(10-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர்):
வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. கடந்த 1998-ம் ஆண்டு மன்ற தீர்மானத்தின்படி 10-வது வார்டில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை.
செயல் அலுவலர்: கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சம்பந்தமாக கோத்தகிரி தாசில்தருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஆய்வு செய்த பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பேரூராட்சி நிதிநிலையின்படி அனைத்து வார்துகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
கற்பகம்(17-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர்): பேரூராட்சியின் நிதிநிலை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள போதுமானதாக இல்லாவிடினும் புதர் செடிகளை வெட்டி அகற்றுவது மற்றும் குடிநீர், தெருவிளக்கு, நடைபாதை உள்ளிட்ட அடிப்படை தேவைகளையாவது நிறைவேற்ற வேண்டும்.
வெஸ்லி(11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர்): தமிழக அரசின் நற்பெயரை மக்களிடம் காப்பாற்ற வேண்டியது அவசியம். எனவே வார்டுகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள போதிய நிதியை ஒதுக்க ஆவன செய்ய வேண்டும்.
இதையடுத்து பேரூராட்சி மூலம் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயல் அலுவலர், தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் உறுதி அளித்தனர். இதனால் சமாதானமடைந்த கவுன்சிலர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் விடுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.