நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

நெல்லையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

Update: 2022-11-30 20:27 GMT

நெல்லை மாநகராட்சி கூட்டம், மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதிகளில் சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்களின் விவாதம் வருமாறு:-

5-வது வார்டு ஜெகநாதன் (தி.மு.க.):- மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பனையன்குளத்தில் பன்றி வளர்ப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கக்கன் நகரில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை திறக்க வேண்டும். கவுன்சிலர்கள் சொல்லும் கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்றி தர வேண்டும். வார்டுகளுக்கு ஆய்வுக்கு வரும்போது தகவல் தெரிவிக்க வேண்டும்.

ரவீந்தர் (தி.மு.க.):- எனது வார்டில் டெங்கு காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. எனவே அங்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா:- எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதுதொடர்பாக கவுன்சிலர்களை சந்தித்து பொதுமக்கள் புகார் அளித்து வருகிறார்கள். மேலும் பாதாள சாக்கடைக்கு மூடிகள் அமைக்கப்படாமல் உள்ளது.

ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி:- மாநகராட்சி ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள். இதனால் கடந்த ஒரு மாதமாக சாக்கடை அடைப்புகள் ஏற்படவில்லை. நீண்ட நாட்களாக உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

28-வது வார்டு சந்திரசேகர் (அ.தி.மு.க.):- எனது வார்டு பகுதியில் முழங்கால் அளவுக்கு கழிவுநீர் தேங்கி உள்ளது. அதனை அகற்றி சீரமைக்க வேண்டும்.

30-வது வார்டு ஜெகநாதன் என்ற கணேசன் (அ.தி.மு.க.):- தைக்கா தெருவில் கடந்த 5 ஆண்டுகளாக மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே சீரான குடிநீர் வழங்க வேண்டும்.

50-வது வார்டு ரசூல் மைதீன் (த.ம.மு.க.):- சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனை தவிர்க்க மாநகராட்சி புதிய நடைமுறையை கையாண்டதற்கு நன்றி.

அவருக்கு ஆதரவாக கவுன்சிலர்கள் பவுல்ராஜ், நித்திய பாலையா உள்ளிட்டோரும் பேசினர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் பேச்சியம்மாள் பேசினார். அவர், பசு மாடுகளை பிடித்து ஏலம் விட்டு அடிமாடாக விற்பனை செய்வதாக அதிகாரி மீது புகார் கூறினார். இதற்கு மற்ற கவுன்சிலர்களும், அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்ததால் காரசார விவாதம் நடைபெற்றது. உடனே மேயரும், கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியனும் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நி றைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்