கூடலூரில் அரசு விழாக்களில் கவுன்சிலர்களை புறக்கணிக்கின்றனர்; நகராட்சி கூட்டத்தில் குற்றச்சாட்டு

கூடலூரில் அரசு விழாக்களில் கவுன்சிலர்களை புறக்கணிக்கின்றனர் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

Update: 2023-05-26 21:00 GMT

கூடலூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று மாதாந்திர நகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமை தாங்கினார். ஆணையாளர் காஞ்சனா, சுகாதார அலுவலர் விவேக், மேலாளர் ஜெயந்தி, துணைத்தலைவர் காஞ்சனா சிவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், கூடலூர் நகராட்சி பகுதியில் புதிய தார்சாலை மற்றும் சாலைகள் சீரமைத்தல், புதிய 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், புதிய 2 கழிப்பறை கட்டுதல், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அங்கன்வாடி மையம் கட்டுதல் உள்ளிட்ட 41 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அதன்பிறகு நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், கூடலூர் நகராட்சியில் நடைபெறும் அரசு விழாக்களில் கவுன்சிலர்களை அழைப்பதில்லை. அவர்களை புறக்கணிக்கின்றனர். எனவே இனி நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். மேலும் அந்தந்த வார்டுகளில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றனர். மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பில் செயல்பட்டு வந்த குடிநீர் திட்டத்தை, நகராட்சி கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததற்காக நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளருக்கு கவுன்சிலர்கள் பாராட்டு தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்