நல்லம்பள்ளி அருகே கோரவிபத்து: லாரி மீது கார் மோதியதில் முன்னாள் பெண் கவுன்சிலர் பலி-மருமகள் உள்பட 3 பேர் படுகாயம்

Update: 2022-12-01 18:45 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியதில் முன்னாள் பெண் கவுன்சிலர் பலியானார். மேலும் அவருடைய மருமகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

முன்னாள் பெண் கவுன்சிலர்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. இவருடைய மனைவி பிரமிளா (வயது 50). இவர் வேப்பனப்பள்ளி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

இந்தநிலையில் பிரமிளா கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதியடைந்து வந்தார். இதனால் அவர் டாக்டர்களின் அறிவுரைப்படி சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்ல திட்டமிட்டார்.

இதையடுத்து பிரமிளா தனது மருமகள் கிருஷ்ணவேணியுடன், வேப்பனப்பள்ளியில் இருந்து சேலத்துக்கு நேற்று காலை காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரை வேப்பனப்பள்ளியை சேர்ந்த இப்ராஹிம் ஓட்டினார்.

பரிதாப சாவு

இந்த கார் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தடங்கம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்னால் சென்ற மொபட் மீது கார் மோதி நிலைதடுமாறியது. மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதனால் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி பிரமிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் கிருஷ்ணவேணி, டிரைவர் இப்ராஹிம் மற்றும் மொபட்டில் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த பொம்மை வியாபாரி பாலமுருகன் (38) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

தீவிர சிகிச்சை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த கிருஷ்ணவேணி, இப்ராஹிம், பாலமுருகன் ஆகியோரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் பிரமிளாவின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சோகம்

இதனிடையே விபத்து குறித்து அறிந்த பிரமிளாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் பலியான பிரமிளாவின் உடலை பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது. இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி முன்னாள் பெண் கவுன்சிலர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்