குடோன், கடைகளில் பதுக்கிய4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தேனியில் குடோன், கடைகளில் பதுக்கிய 4 டன் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-09-16 18:45 GMT

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட எடமால்தெரு, மேலப்பேட்டை கடைத்தெரு, கடற்கரை நாடார் தெரு போன்ற இடங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவில் தேனியில் 2 குடோன்கள், 4 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் திடீரென 'சீல்' வைத்தனர்.

இதையடுத்து நகராட்சி ஆணையர் கணேசன் தலைமையில், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் ஜெயச்சந்திரன், சுல்தான், பாலகிருஷ்ணன், சரவணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் நேற்று காலையில் 'சீல்' வைக்கப்பட்ட கடைகள், குடோன்களை அவற்றின் உரிமையாளர்கள் முன்னிலையில் திறந்து சோதனை நடத்தினர்.

4 டன் பறிமுதல்

அப்போது அங்கு பண்டல் பண்டலாக தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தம்ளர்கள், தட்டுகள் போன்றவை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. எடமால்தெரு, மேலப்பேட்டை கடைத்தெரு, கடற்கரை நாடார் தெரு ஆகிய இடங்களில் சீல் வைக்கப்பட்ட 6 கட்டிடங்களில் இருந்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் ஒரு கடையிலும் சோதனை நடத்தியதில் அங்கிருந்தும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த 7 இடங்களில் இருந்தும் சுமார் 4 டன் அளவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அபராதம்

2 குடோன்களின் உரிமையாளர்கள், 5 கடைகளின் உரிமையாளர்கள் என மொத்தம் 7 பேருக்கு மொத்தம் ரூ.72 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் கணேசன் கூறும்போது, 'அடுத்த சில மாதங்கள் பண்டிகை காலம் என்பதால் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. இதற்காக மொத்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வைத்து இருப்பார்கள் என்பதால் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் குப்பைக் கிடங்கில் மக்காத குப்பைகளை எந்திரம் மூலம் தூளாக்கப்பட்டு, சிமெண்டு உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்