பருத்தி அறுவடை பணி தீவிரம்
தேவூர் பகுதியில் பருத்தி அறுவடை பணி தீவிரம் அடைந்துள்ளது. மகசூர் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேவூர்:
தேவூர் அருகே சென்றாயனூர், கோனேரிபட்டி, பெரமச்சிபாளையம், மோட்டூர், செட்டிபட்டி, ஒடசக்கரை உள்பட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் 6 மாதங்களில் அறுவடைக்கு வரக்கூடிய பி.டி. ஒட்டு ரக பருத்திகளை சாகுபடி செய்கிறார்கள். தற்போது பருத்தி செடிகளில் காய்கள் காய்த்து பஞ்சு வெடித்து வருகிறது. இதனால் விவசாயிகள், கூலித் தொழிலாளர்களை பயன்படுத்தி பருத்தி பஞ்சு அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த ஆண்டு பருத்தி விலை உயர்வாக இருந்தது. தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு அதிகளவில் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு பருத்தி பூக்கள் விடும் தருணத்தில் மழை மற்றும் காற்றின் காரணமாக பருத்தி பூக்களில் மகரந்தச்சேக்கை நடைபெறாமல், காய்கள் காய்ப்பது குறைவானது. மேலும் அதிகளவில் நோய் தாக்கம் ஏற்பட்டதாலும் மகசூல் குறைவாக உள்ளது, பருத்தி சாகுபடி செய்ய 1 ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவானது., தற்போது பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ 10 ஆயிரத்துக்கு மேல் விற்பனை ஆனாலும் பருத்தி மகசூல் குறைவால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, இது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது என்றனர்.