பருத்தி சாகுபடியில் அதிக மகசூல் பெற ஒருங்கிணைந்த உர மேலாண்மை அவசியம்
பருத்தி சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு உர மேலாண்மை அவசியம் என கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ரவி, மண்ணியல் துறை இணை பேராசிரியர் அனுராதா ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
பருத்தி சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு உர மேலாண்மை அவசியம் என கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ரவி, மண்ணியல் துறை இணை பேராசிரியர் அனுராதா ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழு உரம்
பருத்தி சாகுபடியில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் பொருட்டு தொழு உரம், மக்கிய குப்பை அல்லது ஆட்டுக்கிடை ஆகியவற்றை உரமாக இடலாம். ஒரு எக்டேருக்கு 12.5 டன் தொழு உரம் இடுவதால் மண்ணின் அங்கக தன்மை நிலை நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் பருத்தியில் கூடுதல் மகசூல் பெற முடியும். ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு கிலோ பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடலாம்.
தமிழ்நாடு வேளாண்மை துறையின் நுண்ணூட்டச்சத்து உரத்தை ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் 20 கிலோ மணலுடன் கலந்து இடலாம். இதே வீரிய ஒட்டு ரகங்களுக்கு 6 கிலோ நுண்ணூட்டச்சத்தை 20 கிலோ மணலுடன் கலந்து அளிக்க வேண்டும்.
சீரான அறுவடை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் காட்டன் பிளஸ் ஏக்கருக்கு 2.5 கிலோ 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் இரு முறை தெளிக்க வேண்டும். இதனால் பூ மற்றும் சப்பைகள் உதிர்வது குறையும். காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் விளைச்சல் 15 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மண் ஆய்வு அடிப்படையில் வயலில் உரங்களை இடவேண்டும். வயல் மண் ஆய்வு செய்யப்படாத நிலமாக இருந்தால் பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்ற உர அளவை இடவேண்டும்.
வீரிய ஒட்டு ரகங்கள்
வீரிய ஒட்டு ரகங்களுக்கு யூரியாவை 3 பிரிவாகப் பிரித்து முதல் பகுதியை அடி உரமாகவும், மீதமுள்ள இரு பகுதியினை நட்ட 45-வது, மற்றும் 65-வது நாட்களில் மேலுரமாகவும் இடவேண்டும். இதற்கு அடி உரமாக 50 கிலோ டி.ஏ.பி. 30 கிலோ யூரியாவும், 13 கிலோ பொட்டாஷ் உரமும் இட வேண்டும். மறுபடியும் 30 கிலோ யூரியா 13 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை 45 நாட்களில் ஒரு முறையும், 60 நாட்களில் மறு முறையும் இட வேண்டும். இவ்வாறு பருத்தியில் நாம் ஒருங்கிணைந்த உர மேலாண்மையை மேற்கொண்டால் கண்டிப்பாக மகசூல் அதிகமாக கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.