ஒரே நாளில் ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம்

கும்பகோணத்தில் ஒரே நாளில் ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டது.

Update: 2023-06-28 20:28 GMT

கும்பகோணத்தில் ஒரே நாளில் ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டது.

பருத்தி சாகுபடி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். 6 மாத கால பயிரான பருத்தி சாகுபடியில் குறைந்த பராமரிப்பு நல்ல மகசூல் மற்றும் அதிக வருமானம் கிடைத்ததால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு குவிண்டால் ரூ.12 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான நிலையில் விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடியில் ஆர்வம் அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது முதல் கட்டமாக பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அறுவடை செய்யப்பட்ட பருத்தியை விவசாயிகள் கும்பகோணம் பகுதியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் நடைபெறும் மறைமுக ஏலம் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.

3 ஆயிரத்து 640 குவிண்டால்

அதன்படி கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நேற்று நடைபெற்றது. விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியாமாலினி, மேற்பார்வையாளர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த மறைமுக ஏலத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து பருத்தி விவசாயிகள் 3 ஆயிரத்து 640 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர்.

கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 11 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தி ஏலம் எடுத்தனர்.

ரூ.1¾ கோடிக்கு ஏலம்

இதில் பருத்திக்கு அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 464 என நிர்ணயிக்கப்பட்டது. குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரத்து 509 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் எடுக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இந்த மறைமுக ஏலம் மூலமாக விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு ரூ.1 கோடியே 86 லட்சம் என ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்