கொங்கணாபுரம் அருகே மின் கசிவால் குடிசை எரிந்து சாம்பல்
கொங்கணாபுரம் அருகே மின் கசிவால் குடிசை எரிந்து சாம்பலானது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் எருமப்பட்டி கிராமம், மட்டம் பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 70). இவருடைய கணவர் சின்னமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து அதே பகுதியில் தனது விவசாய தோட்டத்தில் உள்ள குடிசையில் ராஜம்மாள் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த மின்மோட்டாரை ராஜம்மாள் இயக்க முற்பட்ட போது அதிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு கூரை வீடு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையில் தீ வீடு முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து எடப்பாடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது. தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்பு படையினர் சேத மதிப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.