வரி செலுத்தாததால் வணிக வளாக நுழைவு வாயிலில் குப்பை தொட்டிகளை வைத்த மாநகராட்சி ஊழியர்கள்கடலூரில் பரபரப்பு

வரி செலுத்தாததால் வணிக வளாக நுழைவு வாயிலில் குப்பை தொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் வைத்ததால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-22 18:45 GMT

கடலூர் மாநகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு இனங்களில் வரி செலுத்தாமல் இருப்பவர்களிடம் இருந்து தீவிர வரி வசூல் செய்ய மேயர் சுந்தரி ராஜா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில் பொறியாளர் மகாதேவன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் வரி வசூல் செய்து வருகின்றனர்.

வரி செலுத்தாத நபர்களின் கடைகளை பூட்டி சீல் வைப்பது, பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புகளை துண்டிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

குப்பை தொட்டிகள் வைத்தனர்

இந்நிலையில் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் 24 கடைகள் உள்ளன. இதில் உள்ள கடைக்காரர்கள் இதுவரை ரூ.11 லட்சம் வரி செலுத்தாமல் இருந்து வந்தனர். அவர்களுக்கு நோட்டீசு வழங்கியும் இது வரை அவர்கள் வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இதையடுத்து நேற்று மாநகராட்சி ஊழியர்கள், வரி செலுத்தாமல் உள்ளதால், அந்த வணிக வளாக நுழைவு வாயிலில் 2 பெரிய குப்பை தொட்டிகளை வைத்து விட்டு சென்றனர். இதை பார்த்த கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் எவ்வித அறிவிப்பும், நோட்டீசும் வழங்காமல் எப்படி குப்பை தொட்டிகளை வைக்கலாம், ஒரு சிலர் வரி செலுத்தவில்லை என்றால், அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல் இப்படி பொதுவாக எப்படி குப்பை தொட்டிகளை வைக்கலாம் என்று ஆதங்கப்பட்டனர்.

பரபரப்பு

இருப்பினும் அந்த குப்பை தொட்டிகள் அங்கேயே உள்ளது. அதை சற்று தள்ளி விட்டு அந்த வழியாக கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் சென்று வருகின்றனர். வரி பாக்கிக்காக வணிக வளாகம் முன்பு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்