அம்மா உணவகத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே, அம்மா உணவகத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் பூ மார்க்கெட் அருகே அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பொங்கல், இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் விற்கப்படுகின்றன. இதனை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், பூ மார்க்கெட்டுக்கு வரும் விவசாயிகள் உள்பட பலரும் வாங்கி சாப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, பூ மார்க்கெட் அருகே அமைந்துள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தார். அப்போது உணவு தயாரிக்கும் கூடம், உணவு வழங்கும் இடம், மக்கள் சாப்பிடும் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும். உணவு சமையல் கூடம் உள்பட அனைத்து பகுதிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதேபோல் மக்களுக்கு டோக்கன் முறையில் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.