கொரோனா பாதிப்பு படிப்படியாக உயருகிறது: அ.தி.மு.க.பொதுக்குழுவுக்கு தடையா? அமைச்சர் பதில்

கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படுமா என்பதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

Update: 2022-06-28 23:12 GMT

சென்னை,

சென்னை மருத்துவக்கல்லூரியில், மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் மற்றும் மாணவர் பேரவை உறுப்பினர் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

50 ஆயிரம் முககவசம்

சென்னையில் 207 தெருக்களில் தலா 3-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர், 181 தெருக்களில் தலா 5-க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டில் உள்ளவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முககவசம் அணிவதில் எந்தவித தளர்வுகளும் எற்படுத்தவில்லை. தற்போது பொதுவெளியில் 40 சதவீதம் பேர் முககவசம் அணிந்து வருவது களஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது.

நாளை (இன்று) மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவ அலுவலர்களை கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை வைத்து, 50 ஆயிரம் முககவசங்களை அங்கு வந்துசெல்லும் பொதுமக்களுக்கு வழங்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடையா?

அதனைத்தொடர்ந்து அ.தி.மு.க பொதுக்குழு நடத்த தடை விதிக்கப்படுமா ? என்பது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு மா.சுப்பிரமணியன் பதில் அளித்து கூறும்போது, 'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடத்தினால் எந்தவித தடையும் இல்லை' என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு மற்றும் சென்னை மருத்துவக்கல்லூரி 'டீன்' டாக்டர் தேரணிராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்