ஒரே நாளில் 35,274 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட 38-வது சிறப்பு மெகா முகாமில் 35 ஆயிரத்து 274 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட 38-வது சிறப்பு மெகா முகாமில் 35 ஆயிரத்து 274 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட 29 லட்சத்து 21 ஆயிரத்து 935 பேருக்கு முதல் தவணையும், 27 லட்சத்து 32 ஆயிரத்து 583 பேருக்கு 2-ம் தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இதுவரை 37 சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
நேற்று மாவட்டம் முழுவதும் 38-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. ஊரக பகுதியில் 2 ஆயிரத்து 315 மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் 375 இடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 690 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. இந்த முகாமில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
35,274 பேருக்கு தடுப்பூசி
இந்நிலையில் அனைத்து மையங்களிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் சேலம் ரூரல் பகுதியில் 20 ஆயிரத்து 634 பேருக்கும், சேலம் மாநகராட்சி பகுதியில் 4 ஆயிரத்து 921 பேருக்கும், ஆத்தூர் பகுதியில் 9 ஆயிரத்து 719 பேருக்கும் என மொத்தம் 35 ஆயிரத்து 274 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.