தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 1,000 மையங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவு பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டோர், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் இலவசமாக போடப்படுகிறது.
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் உள்ள வார்டு பகுதிகள், பஸ் நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் முகாம் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், 2-வது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் அனைவரும் இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.