3 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 3 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-07-09 19:09 GMT

கொரோனா தடுப்பூசி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை 31 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதன்மூலம் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்து 75 ஆயிரத்து 298 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 12 லட்சத்து 6 ஆயிரத்து 559 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

15 முதல் 18 வயதுக்குட்பட்ட 69,237 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 61,664 பேருக்கு 2-ம் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 43,220 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 30,938 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 16,949 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 6 நபர்கள், மே மாதம் 3 நபர்கள், ஜுன் மாதத்தில் 26 நபர்கள் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்த நிலையில் தற்போது ஜுலை மாதத்திலிருந்து தினமும் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இன்று முகாம் நடக்கிறது

இதற்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளாததே மிக முக்கிய காரணமாக அமைகிறது. கொரோனா பரவலை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியமாகும். இலக்கினை அடைவதற்கு ஏதுவாக, சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வட்டார வளர்ச்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் என சுமார் 3 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது. தகுதியுடைய 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும், சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களாகிய வருவாய்த்துறை, ஊராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை, காவல்துறை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இம்முகாமில் தடுப்பூசியினை பெற்று பயனடையலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்