குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
43 பேர் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மீண்டும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இதே போல குமரி மாவட்டத்திலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் நாள் தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.
மாவட்டத்தில் 27-ந்தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், களப்பணியாளர்கள் மூலமாகவும் 946 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதாவது அகஸ்தீஸ்வரம் பகுதியில் 5 பேர், கிள்ளியூர்-5, குருந்தன்கோடு-3, முன்சிறை-2, நாகர்கோவில்-13, ராஜாக்கமங்கலம்-5, திருவட்டார்-3 மற்றும் தக்கலை-7 என மொத்தம் 43 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தாய்க்கு கொரோனா
நோய் தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீடுகளில் தனிமையில் இருப்பவர்களை அந்தந்த பகுதிகளை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் அவ்வப்போது கண்காணித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஒரு கர்ப்பிணி கடந்த வாரம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆன நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அதே சமயம் குழந்தைக்கு தொற்று பாதிப்பு இல்லை என்று டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் குழந்தை 24 மணி நேரமும் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறது.