கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்தநிலையில் சமீபகாலமாக கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதன் எதிரொலியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்தது.
அதன்படி நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானலின் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சியில் உள்ள சோதனைச்சாவடியில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனையின் முடிவில் யாருக்கேனும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கவும் சுகாதாரத்துறையினா் ஏற்பாடு செய்துள்ளனர்.