திருச்சி விமான நிலையத்தில் நாளை முதல் கொரோனா பரிசோதனை
திருச்சி விமான நிலையத்தில் நாளை முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
செம்பட்டு:
சீனாவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. சீனாவில் பரவி வரும் புதிய ஒமைக்ரான் வகை வைரஸ்கள் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் உச்சக்கட்ட அலர்ட் ஆகியுள்ள இந்தியா, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தும் நடைமுறையை வருகிற 24-ந்தேதி (நாளை) முதல் தொடங்க அறிவுறுத்தி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பூஷண் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன்படி, திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கும் அந்த சுற்றறிக்கை வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமாரிடம் கேட்ட போது, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தும் நடைமுறை நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் திருச்சி விமான நிலையத்தில் அமல்படுத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.