3,100 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,100 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தினர்.

Update: 2022-06-12 18:04 GMT

புதுக்கோட்டை:

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஒரு பகுதியாக சிறப்பு தடுப்பூசி முகாம் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் நடைபெற்று வந்தன. இதுவரை 29 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்து 57 ஆயிரத்து 216 (97 சதவீதம்) பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 11 லட்சத்து 78 ஆயிரத்து 68 (91 சதவீதம்) பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

15 முதல் 18 வயதுக்குட்பட்ட 69 ஆயிரத்து 34 (93 சதவீதம்) பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 61 ஆயிரத்து 379 (83 சதவீதம்) பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 42 ஆயிரத்து 876 (90 சதவீதம்) பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 29 ஆயிரத்து 673 (63 சதவீதம்) பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 14 ஆயிரத்து 475 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கவும், 100 சதவீதம் தடுப்பூசி இலக்கினை அடைவதற்காகவும் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 3,100 இடங்களில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மிகவும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தினர். புதுக்கோட்டை நகரப்பகுதியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தியதை காணமுடிந்தது. இதில் முதல் தவணையும், முதல் தவணை செலுத்தி 2-வது தவணை செலுத்தாதவர்களும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்களும் செலுத்திக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்