வேலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா ஒரேநாளில் 14 பேருக்கு தொற்று

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.

Update: 2022-06-22 11:44 GMT

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் 14 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல்

வேலூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே மீண்டும் முககவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கடைபிடிக்க தொடங்கி உள்ளது.

மாவட்டத்தில் கடந்த வாரம் வரை ஒரு வாரத்திற்கு 8 பேர் வரை பாதிக்கப்பட்டனர். சில நாட்கள் தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் வெளி மாநிலங்களில் பாதிக்கப்பட்ட சிலர் இங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து சென்றனர்.

இந்தநிலையில் வேலூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவுகிறது. நேற்று முன்தினம் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் 14 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிகிச்சையில் இருந்த 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 1,163 பேர் இறந்துள்ளனர். தற்போது 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பு நடவடிக்கைகள்

வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 10 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருப்பதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது. பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா? என அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் விதிகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்