சித்த மருத்துவ கல்லூரியில் டாக்டர்- 4 மாணவர்களுக்கு கொரோனா; மேலும் 90 பேருக்கு பரிசோதனை

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் டாக்டர், 4 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் 90 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2022-06-30 20:19 GMT

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் டாக்டர், 4 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் 90 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

டாக்டர், மாணவர்களுக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

கடந்த 2 வாரங்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சம் 30-ஐ தாண்டி வருகிறது.

இந்த நிலையில் நேற்றும் கொரோனா பரவல் அதிகரித்து இருந்தது. இதில் நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் ஒரு டாக்டர், 4 மாணவர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தனிமைப்படுத்துதல்

அதாவது, வெளிமாவட்டத்தை சேர்ந்த கொரோனா நோயாளி ஒருவர் சமீபத்தில் இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் மாணவர்கள், அந்த நோயாளி படுக்கை அருகே இருந்த பிற நோயாளிகள் என 58 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் ஒரு டாக்டர், 4 மாணவர்கள், ஒரு நோயாளி என மொத்தம் 6 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. எனவே, அவர்கள் 6 பேரும் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 90 பேருக்கு பரிசோதனை

இதையொட்டி சித்த மருத்துவ கல்லூரி வளாகம் முழுவதும் நேற்று கிருமி நாசினி தெளித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். இதுதவிர மற்ற மாணவர்களுக்கு கொரோனா பரவி இருக்கிறதா? என்பதை கண்டறிய நேற்று சித்த மருத்துவ கல்லூரியில் மேலும் 90 பேருக்கு சளி மாதிரி சேகரித்து பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்திருப்பதால் நெல்லையில் தடுப்பூசி செலுத்துதல், கொரோனா விதிமுறைகளை கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்