திருவண்ணாமலை போலீஸ் கேன்டீனில் திருடிய போலீஸ்காரர் கைது

திருவண்ணாமலை போலீஸ் கேன்டீனில் விலை உயர்ந்த செல்போன்கள், டி.வி.க்களை திருடிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-04 16:03 GMT

திருவண்ணாமலை போலீஸ் கேன்டீனில் விலை உயர்ந்த செல்போன்கள், டி.வி.க்களை திருடிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் கேன்டீனில் திருட்டு

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் போலீசாருக்கான தமிழ்நாடு போலீஸ் கேன்டீன் (காவலர் பல்பொருள் அங்காடி) செயல்பட்டு வருகின்றது.

இந்த கேன்டீனில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் தங்களது அடையாள அட்டையை காண்பித்து பொருட்கள் வாங்கிச் செல்வது வழக்கம். இதில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், செல்போன், டி.வி. உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 10-ந்தேதி காலையில் கேன்டீனை அங்கு பணிபுரியும் போலீசார் திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது கேன்டீனில் இருந்த விலை உயர்ந்த 3 எல்.இ.டி. டி.வி.க்கள் மற்றும் செல்போன்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸ்காரர் கைது

திருடப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. பதிவு எண்களை வைத்து கண்காணித்து வந்தனர். சமீபத்தில் திருடப்பட்ட 3 செல்போன்களில் ஒரு செல்போன் சிம்கார்டு போடப்பட்டு ஆன் செய்யப்பட்டு உள்ளது. அந்த செல்போன் சென்னையில் பயன்படுத்தப்படுவதை அறிந்த திருவண்ணாமலை போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த செல்போனை பயன்படுத்தியது திருவண்ணாமலை ஆயுதப்படையில் பணியாற்றி சென்னை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட போளூரை சேர்ந்த சரத்குமார் (வயது 29) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சென்னை சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், செல்போன்கள் மற்றும் டி.வி.க்களை திருடியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் செல்போன்கள் மற்றும் டி.வி.க்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்