தம்பதியிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்த போலீஸ்காரர் கூட்டாளிகளுடன் கைது

காரில் சென்ற தம்பதியிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் போலீஸ்காரர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-14 20:46 GMT

கொட்டாம்பட்டி,

காரில் சென்ற தம்பதியிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் போலீஸ்காரர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.50 லட்சம் வழிப்பறி

மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்தவர் ஷேக்தாவூத் (வயது 55). ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஷேக்தாவூத், அவரது மனைவி யூசுப் சுலைகா ஆகியோர் ரூ.50 லட்சத்துடன் காரில் சென்றனர். திருச்சியில் டிராவல்ஸ் நடத்திவரும் உறவினரிடம் பணத்தை வழங்க சென்றதாக தெரிகிறது.

கொட்டாம்பட்டி அருகே திருச்சுனை பிரிவு நான்கு வழிச்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது போலீஸ் சீருடை அணிந்த 2 பேர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். இவர்கள் ஷேக்தாவூத் சென்ற காரை மறித்து சோதனை செய்தனர். காரில் பணம் இருந்ததை அறிந்து விசாரித்துள்ளனர். அந்த பணத்திற்கான ஆவணத்தை கேட்டனர். அதற்கு அவர்கள் இல்லை என தெரிவித்தனர்.

இதையடுத்து ரூ.50 லட்சம் மற்றும் சேக் தாவூத் வைத்திருந்த செல்போனை பறித்தனர். பின்னர் ஆவணத்தை காட்டிவிட்டு கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் இருவரும் புறப்பட்டு சென்றனர்.

தனிப்படை அமைப்பு

இதற்கிடையே அவர்களை காரில் பின் தொடர்ந்து சேக்தாவூத் சென்றார். ஆனால், அய்யாபட்டி பாலம் அருகே எதிர் திசையில் சென்று மோட்டார் சைக்கிள் மறைந்துவிட்டது.

இதனையடுத்து கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஷேக் தாவூத் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், துணை சூப்பிரண்டு ஆர்லியஸ் ரிபோனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவ இடத்தின் அருகே உள்ள கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சாந்திபாலாஜி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

போலீஸ்காரர்

மேலும் ஷேக் தாவூத் செல்போன் எண், மதுரை புதூரில் கடைசியாக செயல்பட்டது தெரியவந்தது.

ஷேக்தாவூத்தின் கார் டிரைவர் அபுபக்கர் சித்திக்கின் சகோதரர் சதாம் உசேன்(30) அங்கு கறிக்கடை வைத்துள்ளார். அவருடைய நண்பர் கரும்பாலை பகுதியை சேர்ந்த நாகராஜ கோகுல பாண்டியன்(30).

இவர் ஆயுதபடையில் போலீசாக வேலைபார்த்து வருகிறார். புதூரை சேர்ந்த அசன்முகமது(30), ஆத்தி குளத்தை சேர்ந்த பார்த்தசாரதி (42). இவர்கள் அனைவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

வழிப்பறிக்கு திட்டம்

இந்தநிலையில் டிரைவர் அபுபக்கர் சித்திக் தன் நண்பர்களிடம், ஷேக் தாவூத் அடிக்கடி பெரிய அளவிலான பணம் எடுத்து செல்வதாக கூறியுள்ளார். மேலும் ரூ.50 லட்சத்துடன் திருச்சி நோக்கி காரில் செல்லும் விவரத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து காரை மறித்து வழிப்பறி செய்ய திட்டமிட்டனர்.

முன்னதாக மோட்டார் சைக்கிளில் கொட்டாம்பட்டி அருகே திருச்சுனை விலக்கு நான்கு வழி சாலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் நாகராஜ கோகுலபாண்டியன் மற்றும் பார்த்தசாரதி இருவரும் போலீஸ் போல வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளளனர்.

5 பேர் கைது

மற்றொரு காரில் அசன்முகமது, சதாம் உசேன் இருவரும் ஷேக்தாவூத் வரும் காரை பின்தொடர்ந்து வந்து தகவல் கொடுத்துள்ளனர். இவர்கள் ரூ.50 லட்சத்தை வழிப்பறி செய்துவிட்டு மதுரையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், மதுரையில் பதுங்கி இருந்த 4 பேரை கைது செய்து பணத்தையும் பறிமுதல் ெசய்தனர். வழிப்பறிக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவையும் கைப்பற்றப்பட்டது. மேலும் வழிப்பறிக்கு மூளையாக செயல்பட்ட கார் டிரைவர் அபுபக்கர் சித்திக் போலீசார் கைது செய்தனர்.

ஹவாலா பணம்

காரில் கொண்டு சென்ற ரூ.50 லட்சம் ஹவாலா பணம் என தெரியவந்ததையடுத்து அதுதொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருமானவரித்துறைக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்