விபத்தில்லா மாவட்டமாக மாற்றிட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்றிட அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் உமா அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-08-06 18:45 GMT

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் அருகே உள்ள பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி கருங்கல்பாளையத்தில் சாலை விபத்துகளை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் உமா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் வகையில் பள்ளிக்கல்வித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக சாலை பாதுகாப்பு, விபத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

விபத்தின் போது ஏற்படும் மரணங்களை தடுக்கவும், விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் விபத்திற்கு உள்ளானவர்கள் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகளை இலவசமாக பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இன்னுயிர் காப்போம் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். அது மட்டுமின்றி பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திடவும் சாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்.

விபத்தில்லா மாவட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் விபத்துகளை தடுப்பதற்கும், விபத்தினால் மரணங்கள் ஏற்படுவதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறையினர் வேகமாக வாகனத்தை இயக்குவது, போதையில் வாகனத்தை இயக்குவது போன்றவற்றை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.

மேலும் சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது. பள்ளி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது. நெடுஞ்சாலைத்துறையினர் விபத்து ஏற்படும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகைகள், விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திருகுணா, உதவி கோட்ட பொறியாளர் அசோக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்